News

This is a translation in Tamil. You can also read the original English version.

Tamil-2nd blog

January 20, 2021

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) 4-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் (அக்டோபர் 2020)

நவம்பர் 24, 2020

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) சார்பில் ஜமால் நசீர், புரூக் வோல்போஃர்ட் மற்றும் குமார் வீரப்பன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

எமி ஹாரி, அட்டானு குமார் டத்தா மற்றும் ரேச்சல் லியாவ் ஆகியோரால் தொகுக்கப்பட்டது.

குறிப்பு: கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு என்பது தகவல், ஆலோசனைகள், நோயாளிகள் சேர்த்தல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பரப்புதல் போன்றவற்றை இணைந்து மேற்கொள்ளும் 54 நாடுகளைச் சேர்ந்த 1000 விஞ்ஞானிகள் கூட்டமைப்பைப் பிரதிநிதிக்கும். ஜூலை 2020-இன் முடிவுகள்(3-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள்) மற்றும் எங்களின் ஆய்வு வடிவமைப்பைக் காண எங்கள் தொடக்க வலைப்பதிவை (பிளாக்) வாசிக்கவும். எங்கள் ஆய்வு மறுபயன்பாடு தன்மை கொண்டுள்ளதோடு எங்களின் புதிய ஆய்வு முடிவுகளை வலைப்பதிவுகளின் மூலமாகவும் இணைய தளத்தில் உள்ள முடிவுகள் பகுதியின் வழி சுருக்கமாக தொகுத்து தந்துள்ளோம். இறுதியாக, இங்கு காணப்படும் கலைச்சொற்கள் உங்களுக்கு புதியனவாக இருந்தால், hgi-faq@icda.bio என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தகவலைகளைப் புதுப்பிப்பதன் மூலம் சரியான தெளிவு கிடைப்பதை அறிந்து நாங்கள் மகிழ்சசி அடைவோம். இனி வரும் வாரங்களில், கருத்துக்கள் மற்றும் கலைச்சொற்களை விளக்கும் கூடுதல் தகவல்கள் கிடைக்க வழி செய்வோம். இந்த இடைக்காலத்தில் மரபியல் சார்ந்த அடிப்படை செய்திகளை அறிந்து கொள்ள இந்த தகவல்களைக் காணவும்

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு கோவிட் -19 தீவிரத்திற்கு காரணமாய் உள்ள வலிமையான மரபியல் பகுதிகளைக் கண்டறியும் கூடுதல் மாதிரிகளை அதிகரிக்கச் செய்கிறது.

ஜூலை 2020-இல், நாங்கள் தீவிர கோவிட் -19-உடன் தொடர்புடைய மனித மரபியல் வேறுபாடுகள் கண்டுபிடிப்பு (வெளியீடு 3 முடிவுகளைக் காண அதன் பகுதியைத் தேர்வு செய்யவும்.) மற்றும் 3,199 கோவிட் -19 நோயாளிகளுடன் (எ.கா. நோய் பதிவுகள்) 897,488 கட்டுப்பாடுகள் கொண்ட (எங்கள் வலைப்பதிவில் கூடுதல் தகவல்களைக் காணலாம்) Genome Wide Association Study (GWAS) முடிவுகளை அறிவித்திருந்தோம். நாங்கள் எங்கள் ஆய்வு மாதிரிகளை 16 நாடுகளின் 34 ஆய்வு தகவல்களை ஒருங்கிணைத்து 30,000 கோவிட் -19 - பதிவுகளாகவும் 1.47 மில்லியன் கட்டுப்பாடுகளாகவும் பத்து மடங்குகள் அதிகரித்துள்ளோம். இதில் பங்கேற்றவர்கள் பட்டியலை இங்கு காணலாம். அதன் தரவு தொகுப்பு உட்பிரிவுகள் படம் 1-இல் காட்டப்படுகிறது.

படம் 1: எங்கள் ஆய்வில் ஒவ்வொறு பகுப்பாய்வின் பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம். SARS-CoV-2 என்னும் வைரஸ் கோவிட் -19-க்கு காரணமாக இருப்பது குறிக்கப்பட வேண்டியது. அமரிக்க மனித மரபியல் அமைப்பின் அக்டோபர் 2020-இல் நிகழ்ந்த கூட்டத்தில் ஆண்ட்ரியா கன்னா அவர்களின் கோவிட் -19 HGI படைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

மாதிரி எண்ணிக்கையைக் கூட்டுவதன் வழி முடிவுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? தீவிர கோவிட் -19-க்கு அணுககோல் 3,6,9,12 மற்றும் 21-உடன் தொடர்புடைய ஏழு மரபணு பகுதிகளுக்கான வலுவான ஆதாரத்தை வழங்கியுள்ளோம். மேலும் , அணுககோல் 3 மீதான ஒரு கூடுதலான சமிக்ஞை கோவிட் -19-இன் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பகுதியோடு தொடர்புடையது (படம் 3). எங்களின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் உலகளாவிய பங்களிப்பாளர்கள் வழி எங்களுக்குக் கிடைத்த உயர் தர தகவல்கள் அடிப்படையில் அமைந்த முடிவுகளாக நாங்கள் நம்புகிறோம். இந்த பகுதிகளில் பல, குறிப்பாக தீவிர கோவிட் -19 நிலையில் உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்கள் பரிசோதனை எண்ணிக்கைகளை இரட்டிப்பாக்க வழி செய்யும் Genetics of Mortality in Critical Care (GenOMICC) ஆய்வின் (Pairo-Castineira et al) வழி கண்டுபிடிக்கப் பட்டவை.

தீவிர கோவிட் -19 வளர்வதற்கு காரணிகளாக அமைய சாத்தியம் உடையனவாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் செயல்பாடு ஆகியவற்றை உட்படுத்தும் புதிய முடிவுகள்.

GWAS வழி கண்டறியப்பட்டுள்ள ஏழு வெவ்வேறு புதிய அணுககோல் பகுதிகள் கோவிட் -19-இன் தீவிர தன்மைக்கு நோய் எதிர்ப்புத் தன்மையில் ஏற்படும் இடையூறுகளே காரணம் என்னும் ஆதாரத்தை வலுப்படுத்துகின்றன. அணுககோல் பகுதிகளோடு தீவிர கோவிட் -19 அறிகுறிகளை (எ. கா. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள்) எதிர்நோக்கும் நோயாளிகள் குறித்து நாங்கள் பகுப்பாய்வை நடத்தினோம். நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கும் அல்லது நுரையீரல் நோய்களுக்கு பங்கு பெறும் மரபணுக்களைக் காக்கும் அணுககோல்கள் 3, 6, 9, 12, 19 மற்றும் 21 (படம் 2) மீதான பகுதிகளை நாங்கள் வெற்றிகரமாக கண்டறிந்தோம். இந்த ஒவ்வொரு அணுககோல் பகுதிக்குமான விளக்கங்கள் என்ன?

படம் 2. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 8,638 தீவிர கோவிட் -19 நோயாளிகள் மற்றும் 1.7 மில்லியன் கட்டுப்பாடுகள் அடங்கிய GWAS முடிவுகளை மன்ஹாட்டன் வரைபடம் காட்டுகிறது. முன்நிர்ணயம் செய்யப்பட்ட p-மதிப்பு வரம்பு புள்ளிவிவரத்தைக் காட்டும் சிவப்பு கிடைவரைவுக்கு மேல் உயர்ந்து மரபணு உச்சத்தைச் சுற்றியுள்ள சிவப்பு பெட்டிகள் குறிபிட்டுள்ளதன்படி சார்பற்ற குறிப்பிடத்தக்க தொடர்புகளைப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இது எங்களின் முந்தையை ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அணுககோல் 3-க்கான தொடர்புகளில் மேலும் ஒன்றைச் சேர்ப்பதாகும். இந்நிலைகள் அருகில் இருக்கும் உயிரியல் முக்கியத்துவத்திற்கு சாத்தியமான மரபணுவைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ள. இதன் தரவு காட்சி விளக்கத்திற்கு எங்களின் முதல் வலைப்பதிவில் உள்ள அடிக்குறிப்பைக் காணவும்

அணுககோல் 3

அணுககோல் 3-இன் மரபணு வகைகள் மற்றும் கோவிட் -19 தீவிர தன்மை மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய தன்மையில் ஒரு பகுதி ஆகியவற்றை தொடர்பு படுத்தும் முந்தைய கண்டுபிடிப்புகளை ஜூலை 2020-இல் இருந்து எடுத்துள்ளோம். (இப்பகுதி Ellinghaus et al, Shelton et al, Pairo-Castineira et al, மற்றும் Roberts et al. உள்ளிட்ட இதர சமீபத்திய ஆய்வுகளிலும் கூறப்பட்டுள்ளது.) அணுககோல் 3-இன் இப்பகுதி CXCR6, CCR1, CCR3, மற்றும் CCR9 உள்ளிட்ட கெமோக்கின் ஏற்பிகளுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்குத் தொடர்புடைய சில நன்கு அறியப்பட்ட மரபணுக்களோடு தொடர்புடையதாகும்.

அணுககோல் 6

நுரையீரல் புற்றுநோய் வளர பங்கு வகிக்கும் FOXP4 மரபணுவுடன் (அணுககோல் 6-இல்) மிக நெருக்கமான பகுதியில் இருக்கும் மரபணு வகைகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்கள் ஆய்வில் கோவிட் -19 தீவிரத் தன்மையுடன் தொடர்புடைய மரபணு வகைகள் மற்றவற்றைக் காட்டிலும் சில மக்கள் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. மரபியல் வல்லுநர்கள் மரபணு வகைகள் எண்ணிக்கையை கொடுக்கப்பட்டுள்ள மரபியல் அல்லது நோய்க்குச் சாத்தியமான விளைவுகளை அனுமானிக்கப் பயன்படுத்துகின்றனர். ஒரு மரபணு வகை அரிதானதாக இருக்குமானால் மரபியலுக்கோ அல்லது நோய்க்கோ இந்த வகை, ஆபத்தை அளிக்கக் கூடியதாக அமையும். FOXP4-க்கு தொடர்புடையதாக அறியப்பட்ட மரபணு ஐரோப்பியர்களின் மத்தியில் அரிதான வகையாகக் கருதப்படுகிறது. மக்கள் தொகையில் 1%-க்கு மட்டுமே இது காணப்படுகிறது. இருந்த போதிலும் இந்த மரபணு வகை கிழக்கு ஆசியர்களிடமும் (39%) மற்றும் ஹிஸ்பானிக்/லத்தினோ (18%) மக்களிடமும் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கோவிட் -19 தீவிரத் தன்மையுடன் இதன் தாக்கத்தை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

மேலும், முக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கான புரதங்களை உருவாக்கும் மரபணுக்களைக் கொண்ட பகுதியான, major histocompatibility complex (MHC)-இல் அணுககோல் 6-க்கான இரண்டாவது சார்பற்ற பகுதியை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இருந்தபோதிலும் இந்தப் பகுதியிலிருந்து அளிக்கப்படும் விளைவுகள் மற்ற அனைத்து ஆய்வுகளிலிருந்து மாறுபட்டதாக உள்ளதோடு இந்த அறிகுறி சில குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமானதாக இருக்குமா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அணுககோல் 9

கோவிட் -19-உடன் தொடர்பு ஏற்படுத்தும் இரத்த வகை குறித்து செய்தி வழி நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம்: ஏ பிரிவு இரத்தம் அதிக அளவிலான ஆபத்தை அளிக்கும் வேளையில் ஓ பிரிவு பாதுகாப்பினை தரவல்லது. இத்தகவல் நியூ இங்கிலாந்து மருத்துவ ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டிருந்ததோடு 23andMe ஆய்வின் முன்னோட்ட பதிவிலும் வெளியிடப் பட்டிருந்தது. எங்களின் முதல் வலைப்பதிவு கட்டுரையில், கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) ஏ பி ஓ (ABO) இரத்தப் பிரிவு பகுதி என அணுககோல் 9-இல் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம். இப்பொழுது, மாதிரி எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதன் வழி, பாதுகாப்பளிக்கும் மரபணு தொடர்புகளை இந்தப் பகுதியில் நாங்கள் காண்கிறோம். இருந்தபோதிலும் அணுககோல் 6-இல் காணப்பட்ட MHC தொடர்புகள் போன்று இந்த தொடர்புகளும் அனைத்து ஆய்வுகளைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதோடு இந்த அறிகுறி சில குறிப்பிட்ட நோயாளி குழுவிற்கு மட்டும் பொருந்தக் கூடியதாக எங்களால் உறுதி படுத்த முடியவில்லை.

அணுககோல் 12

அணுககோல் 12-இல் நச்சுக் கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பு செயல்முறையாக செயல்படும் நச்சுக் கிருமி கட்டுப்பாடு நொதி (enzyme) இயக்கிகளுக்கு குறியாக்கமாக விளங்கும் OAS மரபணு குழுமத்தோடு நெருங்கிய தொடர்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்தப் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட மரபணு வகைகள் பாதுகாப்பு விளைவு கொண்ட க்ரோனிக் லிம்போசைடிக் லுகேமியாவுடன் (chronic lymphocytic leukemia) தொடர்புடையதாகக் காட்டப் பட்டுள்ளன.

அணுககோல் 19

அணுககோல் 19-இல் இரண்டு பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். முதலாவது, நுரையீரல் ஃபைப்ரோசிஸ்-கு (fibrosis) ஆபத்தை அதிகரிக்கத் தொடர்புடைய மரபணுவான DPP9-க்கு அருகில் அமைந்துள்ளது. புதிராக அமையும் வண்ணம், புரதம் கொரோனா நச்சுக்கிருமியின், மனித உடல் செல்லுக்குள் நுழையும் (Middle East Respiratory Syndrome (MERS)-க்கு காரணமான நச்சுக்கிருமி மற்றொரு தன்மைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் புரதமான DPP4-உடன் DPP9 நெருங்கிய தொடர்புடையது.

இரண்டாவது மரபணு பகுதி, அணுககோல் 19-இல் அடையாளம் காணப்பட்டுள்ள மரபணு வகை TYK2 மரபணுவோடு நெருங்கிய தொடர்புடையதாகும். TYK2 மரபணுவில் காணப்படும் வகைகள் இதற்கு முன் நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி (நோயெதிர்ப்பு இயக்கத் தூண்டலுக்கு பலவீனமான அறிகுறி கொண்டுள்ளதோடு நச்சுக்கிருமி தொற்றிற்கு எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மை உயர்ந்த அளவில் ஒருவருக்கு உள்ள நிலை) கொண்ட நோயாளிகளிடம் காணப்பட்டுள்ளன.

TYK2 -இல் நன்கு அறியப்பட்ட மரபணு வகையானது பலதரப்பட்ட தானியக்க நோயெதிர்ப்பு சக்தி நிலையின் (எ . கா.லூபஸ் (lupus )மற்றும் முடக்கு வாதம்) குறைக்கப்பட்ட அபாயத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது, (அனைத்து வகைகளும் தீங்கானவை அல்ல என்பதோடு இது மரபியல் தன்மையிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.) இதே TYK2 வகை நமது ஆய்வில் தீவிர கோவிட் -19-உடன் குறிப்பிடக்கூடிய அளவில் தொடர்பு கொண்டிருப்பதோடு கோவிட் -19-இன் தீவிர தன்மையை அதிகரிக்கும் அபாய நிலையோடு தொடர்புபடுத்தப்படுகிறது. TYK2-ஐ இலக்காக கொண்ட தானியக்க நோயெதிர்ப்பு நோய்களுக்கான சிகிச்சைகள், கோவிட்-19-க்கு சிகிச்சை அளிக்க மறுபயன்பாட்டிற்கு கொண்டு வர முடிந்தாலும், TYK2 வகை தானியக்க நோயெதிர்ப்பு நோய்களுக்கும் (பாதுகாப்பு) கோவிட் -19-க்கும் (அபாயம்) இடையில் எதிர் விளைவை அளிக்கும் என்பதால் இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

அணுககோல் 21

முடிவாக, அணுககோல் 21-இல் காணப்படும் தொடர்புகள் IFNAR2 மற்றும் IL10RB மரபணுக்களுக்கு அருகே அமைந்துள்ளன. நச்சுத்தடுப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமானதாக அமையக் கூடிய இன்டர்ஃபெரான் ஏற்பியோடு இணைப்பை ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு மூலக்கூறின் (immunological molecule) இணைப்பகுதிக்கு IFNAR2 மரபணு குறியாக்கம் செய்வதால் இந்த அறிகுறி ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவதை நாங்கள் அறிகிறோம். கோவிட்-19 தொற்றின் ஆரம்பக்கட்ட நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையாக இன்டர்ஃபெரான் பயன்பாடு குறித்து மருத்துவ முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் அதன் இலக்கு இன்னும் அறியப்படாமலேயே உள்ளது. தீவிர கோவிட் -19 நோயாளிகளுடன் தொடர்புடைய மரபணு வகைகள் ஆண்களைவிட குறிப்பிடத்தகுந்த அளவில் பெண்களுக்கே அதிகமாக இருப்பது ஆச்சரியப்படும் விதத்தில் உள்ளது. ஆகையால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிககளின் மரபணு தொடர்பு தகவல் சேகரிப்பில் பால் சார்ந்த ஆய்வும் இருக்குமாறு அனைத்து பங்களிப்பாளர்களிடம் இருந்து பெறும் மாதிரி சேகரிப்பை நாங்கள் மேம்படுத்துகிறோம்.

கோவிட் -19 எளிதில் பாதிப்புறும் தன்மை-க்குத் தொடர்புடைய அணுககோல் 3 -இன் கூடுதல் பகுதி

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு அணுககோல் பகுதிகள் கோவிட் -19-க்கு எளிதில் பாதிப்புறும் தன்மை உடைய நோயாளிகள் (எ. கா. மருத்துவமனையில் சேர்க்கப்படாத கோவிட் -19 பரிசோதனையில் நோய் தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள்) உடனான தொடர்பு குறித்து பகுப்பாய்வு நடத்தியுள்ளது. நாங்கள் அணுககோல் 3, 9, மற்றும் 21 (படம் 3) ஆகியவற்றில் உள்ள பகுதிகளைக் கண்டறிந்துள்ளோம். இப்பகுதிகளில் பல, தீவிர கோவிட் -19 பகுப்பாய்வுகளோடு (படம் 2) ஒன்றிணைகின்றன. ஆனால் பல மரபணுக்கள் கொண்ட ஒரு பகுதியை அணுககோல் 3-இல் நாங்கள் கண்டறிந்துள்ள அதேவேளையில் இவற்றுள் எவை இந்த தொடர்பை முன்னெடுக்கின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

படம் 3. GWAS 30,937 கோவிட் -19 எளிதில் பாதிப்புறும் தன்மை உடைய நோயாளிகளோடும் 1.5 மில்லியன் கட்டுப்பாடுகளுடனும் நடத்தப்பட்ட GWAS ஆய்வு முடிவுகளைக் காட்டும் மன்ஹாட்டன் வரைவு. கோவிட் -19 எளிதில் பாதிப்புறும் தன்மையுடன் சார்பற்ற குறிப்பிடத்தக்க ஒரு தொடர்பு (முன்நிர்ணயம் செய்யப்பட்ட p-மதிப்பு வரம்பு புள்ளிவிவரத்தைக் காட்டும் சிவப்பு கிடைவரைவுக்கு மேல் உயர்ந்து மரபணு உச்சத்தைச் சுற்றியுள்ள சிவப்பு பெட்டிகள் குறிபிட்டுள்ளதன்படி) அணுககோல் 3, 9, மற்றும் 21-இல் தீவிர கோவிட் -19 உடனும் தொடர்பு உள்ள பகுதிகளோடு கூடுதலாக இணைவதை இப்பகுப்பாய்வு காட்டுகிறது. இதன் தரவு காட்சி விளக்கத்திற்கு எங்களின் முதல் வலைப்பதிவில் உள்ள அடிக்குறிப்பைக் காணவும்

நமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்

தீவிர கோவிட் -19 -இன் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள மரபணு தோற்ற மூலத்தை எங்களின் புத்தம் புதிய கண்டுபிடிப்பு மேலும் விளக்குவது குறித்து அறிவிப்பதில் ஆர்வமாக உள்ளோம். இருந்தபோதிலும் இப்பகுதிகளை கண்டறிய GWAS உதவியுள்ள அதே வேளையில் இப்பகுதிகளில் காணப்படும் காரண மரபணு மற்றும் நோயின் தீவிரத் தன்மையுடன் சம்பந்தப்பட்ட உயிரியல் வழிமுறைகளைத் தீர்மானிக்க அதிக ஆய்வுகள் தேவைப்படும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மற்ற ஆய்வுகளோடும் ஒத்துப்போகும் வகையில், மனித மரபணு வகைகள் SARS-CoV-2-ஆல் பாதிப்புற்றவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தூண்டலுக்கான ஆதிக்கத்தை உண்டாக்குவதன் வழியாகவும் தீவிர கோவிட் -19 வளர்ச்சிக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எங்களின் சமீபத்திய முடிவுகள் கூடுதல் ஆதாரத்தை வழங்குகின்றன. பல விஞ்ஞானி குழுக்கள் தீவிர கோவிட் -19-உடன் தொடர்புடைய உயிர்வேதியல் வழிமுறைகளை வெளிப்படுத்த பின்தொடர் பகுப்பாய்வுகளுக்கு இந்த GWAS முடிவுகளை பயன்படுத்துகின்றனர். இது நோய் வளர்ச்சியை புரிந்துகொள்ளும் வழிகளை வழங்கலாம் என்பதால் மருத்துவ புரிதலுக்கும் மற்றும் நோயாளிகள் மேலாண்மைக்கும் உதவும். தொடர்ந்து கொண்டிருக்கும் பின்தொடர் பகுப்பாய்வுகள் அணுககோல் 3-இல் உள்ளதை போல தொடர்புடைய பகுதிகள் பல மரபணுக்களைக் கொண்டிருக்கும்போது ஒற்றை காரண மரபணுவைக் கண்டறிய உதவுவதோடு மரபணு வகைகளால் பாதிப்புற வாய்ப்புள்ள திசுக்களையும் கண்டறிய உதவும் (மேல் தகவல்களுக்கு சமீபத்திய விஞ்ஞானிகள் வலைப்பதிவைப் படிக்கவும்.).

ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதையொட்டி எங்கள் ஆய்வை விரிவாக்கியுள்ளோம். கோவிட் -19 டிசம்பர் 2020-இல் ஏற்படும் அடுத்த தகவல் நிலை அறுதிப்பாட்டில், எங்கள் இந்தப் பதிவில் காணப்படும் தற்போதைய முடிவுகளை பிரதிபலிக்கும் வண்ணம் அமைவதோடு, கோவிட் -19-உடன் தொடர்புடைய புதிய மரபணு வகைகளை கண்டறிவோம் என்ற எதிர்பார்ப்பில் அதிகரிக்கப்பட்ட மாதிரியைக் கொண்டு மீண்டும் பகுப்பாய்வை மேற்கொள்வோம். மேலும், எதிர்வரும் பகுப்பாய்வுகளுக்கு நோயாளிகளை வரையறுக்கு முறை மற்றும் கட்டுப்பாடுகளையும் சீராக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூடுதல் மரபணு ஆய்வுகள் வழி மரபணு வகைகள் எவ்வாறு கோவிட் -19-க்கும் எளிதில் நோய் தொற்றும் தன்மைக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற புரிதல் மேம்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

நன்றி நவில்தல்

சிந்தனைமிக்க பின்னூட்டத்திற்கும் மீள்பார்வைக்கும் ஷியா ஆண்ட்ரூஸ் மற்றும் ஆண்ட்ரியா கன்னா ஆகியோருக்கு நன்றி. எங்கள் ஆய்வு முடிவுகளுக்கு பங்களித்த அனைத்து ஆய்வுகளுக்கும் நன்றி நவில விரும்புகிறோம் (படம் 4).

படம் 4: கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்புக்கு பங்களித்த பங்கேற்பாளர்கள் பட்டியல். அக்டோபர் 2020-இல் அமெரிக்க மனித மரபியல் கழக கூட்டத்தில் கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) குறித்த ஆண்ட்ரியா கன்னா அவர்களின் விளக்கக்காட்சிலிருந்து எடுத்தாளப்பட்டது.